தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மதுவகைகள் சப்ளை செய்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் சில்லறைக் கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு கடைகளிலும் ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் அனைத்தும் இருப்பு வைக்கப்படும். பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும்.
அடுத்த மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் இப்போதே மது விற்பனை அதிகரித்து வருகிறது என்பதால், கடைகளுக்கு சப்ளையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக வியாபாரம் நடக்கும் கடைகளில் 10 நாட்களுக்கு மேல் தேவையான மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது மது பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.