தமிழகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. அதனால் தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை தமிழக அரசு தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தியது. அதன்படி அங்கீகாரம் வழங்கும் முறையும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் எந்த ஒரு தனியார் பள்ளிக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளின் கட்டட உறுதித்தன்மை, பேருந்து பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான அரசாணையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டி கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த அரசாணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு, மூன்று வருடங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
இதனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் பொதுச் செயலாளர் பழனியப்பன் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.அதில், தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் பிரிவுகளிலும், மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கான விதிகளிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்க எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அங்கீகாரம் என்பது நிரந்தரமானது. சட்டத்தில் சொல்லப்படாத அங்கீகாரத்தை அதிகாரிகள் செயல்படுத்த முடியாது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசு ஆணை சட்டவிரோதமானது. பல ஆண்டுகளாக நிரந்தரமாக நடத்தப்பட்டுவரும் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் என்பது நிர்வாகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தண்டபாணி, மனு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.