தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் பெரும்பாலான இடங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.அதிலும் குறிப்பாக சென்னையில் காணுமிடமெல்லாம் மழைநீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்தத் தொடர் கனமழை எனது அடுத்த நான்கு நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் மழை வெள்ளத்தால் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் கன மழையால் சாலைகளில் சூழ்ந்துள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி ஊசி போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும். காய்ச்சல்,வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பொதுமக்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.மருத்துவ சேவைக்கு 044-29520400, 29510500, 9444340496, 8754448477ஆகிய எண்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.