தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் மின் வணிக சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகள், பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படும். உணவு பார்சல்கள் சேவை தொடர்ந்து நடைபெறும். காலை 6 மணி முதல் 10 மணி, மதியம் 2 மணி முதல் 3 மணி, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்சல் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.