தமிழகத்தில் தைப்பூசம் தினத்தை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முகூர்த்த நாட்கள் போல, தமிழ் வருட பிறப்பு, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற நாட்களில் பத்திரப்பதிவு செய்ய மக்கள் விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 2021ல் ஏப்ரல் 14, ஆகஸ்ட் 3, தைப்பூச நாளான 2022 ஜன 18 ஆகிய தினங்களில் சார்- பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என 2021 ஏப்ரலில் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தைப்பூச நாளான வருகிற 18ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்நாளில் காலை 10 மணியில் இருந்து சார்-பதிவாளர் அலுவலகங்கள் திறந்திருக்க வேண்டும். மேலும் பத்திரப் பதிவு பணிகளை செய்ய வேண்டும் என்றும் பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுமுறை நாள் பத்திரப் பதிவுக்கான கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.