தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, தமிழ்நாடு அரசு சார்பில் பஞ்சாயத்துராஜ் இயக்குநர் பிரவீன் நாயர் கூறியுள்ளார்.