தமிழகத்தில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாளை காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமல் அப்படியே இருக்கிறார்கள்.
அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் ஏன் எழவில்லை? அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும்தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் நோக்கத்தில் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதிகளில் முக்கியமான இடத்தில் தமிழகம் முழுவதும் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு வன்முறையை எதிர்க்கும்,கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்று எழுதிய பலகையை கையில் பிடித்துக்கொண்டு காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.