தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டமானது அண்மையில் தமிழகத் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களை எந்த காரணத்திற்காகவும் ஆவணப் பதிவு செய்யக்கூடாது என பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவற்றை மீறி ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டால் சம்பந்த பட்ட பதிவு அலுவலர், மாவட்ட பதிவாளர் மற்றும் பதிவுத்துறை துணைத்தலைவர் அதற்கு பொறுப்பாவார்கள். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஏரி, சேலையூர் ஏரி ஆகியவற்றின் வழி பாதை மற்றும் உபரி நீர் வெளியேறும் பாதை ஆகியவை தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஏரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து, உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படுவதாக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சிட்லபாக்கம் ஏரிக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்கு அரசு ஆணையிட வேண்டும் என்று பொது நல வழக்கில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, சிட்லபாக்கம் மற்றும் சேலையூர் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.