தமிழகத்தில் பத்திரப் பதிவுக்கு வருவோரை ஆதார் மூலமாக அடையாளம் சரிபார்க்கும் திட்டத்தை மேலும் 100 அலுவலகங்களுக்கு நீட்டித்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய மொத்தம் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இவற்றில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது . அதன்படி பத்திரப்பதிவு பணிகள் ‘ஸ்டார் 2.0’ என்ற சாப்ட்வேர் வாயிலாக ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. சொத்து விற்பவர், வாங்குபவர் குறித்த அடையாளங்களை சரிபார்க்கும் பணிகள் துல்லியமாக்கப்பட்டு உள்ளன.
அதன்படி பதிவுக்கு வருவோரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி அடையாள விபரங்களை சரிபார்க்க சார் – பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது. சார் – பதிவாளரின் கணினியில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தற்போது, 109 சார் – பதிவாளர் அலுவலகங்களில் இந்த வசதி முதற்கட்டமாக ஏற்படுத்தப்பட்டது. 2வது கட்டமாக 100 அலுவலகங்களுக்கு டிசம்பர் 1 முதல் இந்த வசதி விரிவுபடுத்தப்படுகிறது.