தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்திரங்களிலுள்ள மதிப்புகள் சரியாக இருக்கிறதா என்பதை பதிவுக்கு முன் சார்பதிவாளர்கள் ஆய்வு மேற்கொள்வர். இதில் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தன்மையிலேயே அந்த நிலம் இருக்கிறதா, கட்டுமானங்கள் தொடர்பாக மறைக்கப்பட்டுள்ளதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனிடையில் பத்திரத்தில் 600 சதுர அடியில் வீடு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும். அங்கு 1,500 சதுரடி பரப்பளவில் ஆடம்பர பங்களா இருக்கும்.
அவ்வப்போது கள ஆய்வுக்கு செல்லும் சார்பதிவாளர்கள் உண்மை நிலவரத்தை மறைத்துவிட்டு, பத்திரத்தில் குறிப்பிடப்பட்டதை சரி என்று சான்று அளித்து விடுகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, சென்னை மற்றும் கோவை மண்டலத்தில், பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் இத்தகைய மோசடிகள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளன. இதனால் இது குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்த விசாரணையை 15 நாட்களுக்குள் நடத்தி முடித்து அறிக்கை அனுப்ப மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐ.ஜி., உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அவர்கள் கூறினர்.