தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் நடனம், பேச்சுப்போட்டி, ஓவியம் மற்றும் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த மாதம் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான அடுத்த கட்ட மாநில அளவிலான போட்டிகள் இன்று டிசம்பர் 27ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதுரை மாவட்டத்திலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோயம்புத்தூரிலும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னையிலும் போட்டிகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியருடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசர் மற்றும் கலையரசி விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.