தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியண், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்களில் ஏற்பட்ட பலன்கள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வரை நேரடி வகுப்புகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற 31ம் தேதி வரை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.