தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியதால் 3-வது அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைய தொடங்கியதால் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது கொரோனா வழிகாட்டுதலை கடைபிடித்து நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் “பள்ளி பரிமாற்ற திட்டம்” தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் வேறு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள இயற்கை மற்றும் கல்வி சூழல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு முன்பாக இத்திட்டம் நேரடி முறையில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக இத்ட்டம் ஆன்லைன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் வேறு பள்ளிகளில் உள்ள முக்கியமான இடங்களை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும். தற்போது பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் பள்ளி பரிமாற்ற திட்டத்தை ஆன்லைன் மூலம் பிப் 25-ம் தேதிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.