தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. அதன்பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற 17ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற 23ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் வராத காரணத்தால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டபடிகுறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.