சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் கற்பிக்க அச்சப்படுகிறார்கள். அதனால் தமிழகம் முழுவதும் ஆன்லைன் பள்ளி வகுப்புகள் விதிகளை கடுமையாக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளி ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு நடத்தப்படும் என கூறியுள்ளது.