தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மே 6ம் தேதி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே தேனீர் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில், மெட்ரோ, தனியார் பேருந்துகளில் 50% பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழ சரக்கு, மளிகைக்கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படலாம். இறைச்சிக் கடைகள் மீன் மார்க்கெட் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
ஐ.டி. நிறுவனங்களில் இரவுப் பணி மேற்கொள்ள அனுமதி, பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லைதற்போது விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் 06-04-2021 தேதியிலிருந்து 20-06-2021 வரை அமலில் இருக்கும்.