தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை சாலையின் வலது புறமாக நிறுத்தினால், ஓட்டுனர், நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், ஓட்டுனர், நடத்துனர், பயணச் சீட்டு ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படும் போது, சாலையை குறுக்கே கடந்து சென்று வலதுபுறம் உள்ள உணவகங்களின் முன் நிறுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதனால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இனி இடதுபுறம் உள்ள உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும். இதனை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறும் ஓட்டுனர், நடத்துனர்களை, கிளை மேலாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.