தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 2022 ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிக்க அனுமதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.