தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இரவு நேர ஊரடங்கு காரணமாக உள்ளூர் டவுன் பஸ்கள் இரவு 8.30 மணிக்கு பின் டிப்போவுக்கு திரும்பின. தொலைதூர பேருந்துகள் எப்போதும் போல இயக்கப்பட்டது. அதனால் காலை மற்றும் இரவு நேர பேருந்து இயக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதிலும் குறிப்பாக சனிக்கிழமை இரவு மற்றும் திங்கட்கிழமை காலை பேருந்து இயக்கத்தை முடிவு செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தன.
இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு நேர டவுன் பஸ் மற்றும் மாவட்டத்திற்குள் இயங்கும் சர்வீஸ் பஸ் முந்தைய அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பேருந்து இயக்கத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வழக்கம் போல இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் விதமாக தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.