தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். அதனால் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டடு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து அரசு அறிவிப்பின்படி நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் வருகிற ஜன-9ஆம் தேதி முதல் வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் 50 சதவீத நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கும்படி காவல் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னையை விட கோவையில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பொங்கல் பண்டிகை நாட்களில் கடை வீதிகளிலும், நிகழ்ச்சிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் மேலும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது. ஆகவே பொங்கல் வரை ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி விட்டு, பொங்கலுக்கு பின் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.