தமிழகம் முழுவதிலும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் நடக்கும் இடங்களுக்குச் சென்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர் அனைவரும் அங்கேயே விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், முகவரி சான்றாக, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கிப் புத்தகம், கிசான் பத்திரம், தபால் அலுவலக கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, வருமானவரி ஒப்படைப்பு சான்று, வாடகை ஒப்பந்தம், குடிநீர், தொலைபேசி, மின் இணைப்பு மற்றும் கேஸ் இணைப்பு ரசீது, சமீபத்தில் வந்த தபால் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி பிறப்புச் சான்றிதழ், ஐந்து முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதி ஆவணமாக அளிக்கலாம். வருகின்ற 2021 ஜனவரியில் 18 வயது பூர்த்தி அடையும் நபர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.