தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்ததால் கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மறு தேதி அறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக சுற்றுலா தலமான பறவைகள் சரணாலயத்தை மூடப்படுவதாக வனத் துறை விளக்கம் அளித்துள்ளது.