தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளிக்கல்வித்துறை 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டு பொதுத்தேர்வை நடத்தவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலகத்திற்கு சென்று அனைத்து பள்ளி நிர்வாக அதிகாரிகளும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியதற்காக நன்றியையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் தலைமையில் வருகின்ற 14-ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.