தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பலரும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கல்வி படிப்பை இடைநிறுத்தி விட்டு தற்போது கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் வருமானம் இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் சுரேஷ் “கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கற்பித்தல் நடைபெறாமல் ஆசிரியர்களும் துயரத்தில் உள்ளனர். அதேபோல் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர்கள் வருமானம் இல்லாததால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் மாணவர்கள் பலரும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கல்வியை இடைநிறுத்தி விட்டு தற்போது கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் ஆன்லைன் கல்வி முறையாலும் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.