தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசு மறு பரிசீலனை செய்ய கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இந்த அறிவிப்பை வரவேற்கிறது. அதே சமயத்தில் தென்ஆப்பிரிக்காவில் நியோ கோவ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது எனவும் நியோ கோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆகவே பள்ளிகள் மீண்டுமாக திறப்பது மாணவர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு ரத்து செய்து இருப்பது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது அனைத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்ட பின் பள்ளிகளை ஏன் திறக்ககூடாது என்ற கேள்வி எழக்கூடும் என்பதற்காகவே பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருப்பது தேர்தலுக்காகவே என எண்ணத் தோன்றுகிறது.
எனவே தேர்தல் முடிவடைந்த பிறகு புதிய வைரஸ் பரவி வருவதாக சொல்லி தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம். ஆகவே மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தலாமா..? வேண்டாமா..? என்பது தொடர்பாக தமிழக அரசு ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். இதனிடையில் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.