எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் தர மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் ஊழியர்களை உணவு துறை எச்சரித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு அக்., 1-ல் நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் குடும்பஅட்டை மூலம் ரேஷன்களில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். கூடுதலாக, தமிழகத்தில் வசிக்கும் கார்டுதாரர்கள், தங்கள் வார்டு அல்லது கிராமத்தை தவிர்த்து வேறு எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டமும் துவக்கப்பட்டது.
இதனால் கார்டுதாரர்கள் எந்த மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தாலும், அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம். ஜனவரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதால் கைரேகை பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் கார்டுதாரர்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கிய கடைகளில் மட்டுமே பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த பணி முடிவடைந்தால் மீண்டும் எந்த கடையிலும் பொருட்கள் வழங்கலாம்.
இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்க ஊழியர்கள் மறுப்பதாக புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். அதேபோல் பொருட்களை தர மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.