சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து வருகின்ற 29ஆம் தேதி காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா ஊரடங்கை அடுத்த மாதத்திற்கும் நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மண்டலங்களுக்குள் பேருந்து போக்குவரத்தை அனுமதிப்பது, பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆலயங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி சுற்றுலா தலங்களை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடமும் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி விவாதிக்க உள்ளார். இதேபோல் கொரோனா பரவலை குறைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிகளிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிய உள்ளார்.