தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை.
எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி செயல்படும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கூடுதலாக 12,468ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் 5 ஆயிரம் படுக்கைகள் தயாராகியுள்ளனர். மீதமுள்ள படுக்கைகள் தயார் செய்யும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும். கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கும் பணியில் ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. 14 மாவட்டங்களில் கூடுதல் கவனம் எடுத்து படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.