தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கியதும் கொரோனா வைரஸ் பரவலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த 12-ஆம் தேதி வரை நாள்தோறும் தொற்று எண்ணிக்கை சராசரியாக 15 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது 20,000 தாண்டி கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. கடந்த 13- ஆம் தேதி அன்று புதிதாக 20,000 பேருக்கும் 14-ஆம் தேதி 23,459 பேருக்கும், 15-ஆம் தேதி 23,989 பேருக்கும் தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 25,26,11 என பதிவாகியுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அடுத்த 2 வாரங்கள் தமிழக மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பக்கூடும். இதனால் பொது மக்கள் ஒன்றுகூடும் சூழல்கள் அதிகரிக்கும். அதனால் நோய் தொற்று பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. அதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை போன்று சனிக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு நடந்தால் வார இறுதி நாட்களில் வீடுகளிலேயே முடங்கி இருக்கவேண்டிய சூழல் ஏற்படும். இது ஓரளவு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம். எனவே பொருளாதார நடவடிக்கைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வண்ணம் தமிழகத்தில் கடும் ஊரடங்கு அமல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.