தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், தேர்தல் வெற்றிக்குப் பின் பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் உரிய விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும். தொண்டர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற தலைவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.