தமிழகத்தில் நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,நடப்பு ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையை ஆண்களுக்கு 2,000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகவும், பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை இவ்வாரியங்களுக்கான பொது வைப்பு கணக்கில் ஒப்பளிக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.