தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களின் பெயர், எண்ணிக்கை, எடை போன்ற அனைத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது .தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடை ஊழியர்கள் சில பொருள்களை எடுத்து விட்டு வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதற்கு ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்க அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்களின் பெயர், எண்ணிக்கை மற்றும் எடை போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை ஒட்டுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பலர் அதை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து பரிசு தொகுப்பு விவரம் குறித்த பட்டியல் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டிருப்பதை ஆய்வு செய்து உறுதி செய்யுமாறு மாவட்ட வழங்கல் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர், சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த ரேஷன் கடையில் பட்டியல் இல்லாமல் இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.