தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறி இருக்கிறோம், அதை கண்டிப்பாக வழங்குவோம், இதனை எழுதி வைத்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித்தார். தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பேரூராட்சியில் 15-வார்டுகள் மற்றும் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், வேட்பாளர்களின் அறிமுக ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது.
அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, இந்த தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்குவதற்கான வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். ஆகவே அந்த பணத்தை கண்டிப்பாக வழங்குவோம், எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.