தமிழகத்தில் இன்று (பிப்…19) 38 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து வாக்கு பதிவை அடுத்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதாவது திமுகவினர் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்குவதற்கான போலியான விண்ணப்பங்களை ரேஷன் கடை ஊழியர்களிடம் வழங்கி விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு ரேஷன் கடைகளில் அரசியல் பிரமுகர்கள் புகைப்படம் உள்ள போஸ்டர்கள் அல்லது விளம்பர பலகை அகற்ற கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொருட்கள் வாங்க வரும் ரேஷன் அட்டைதாரர்கள் தவிர்த்து பிற வெளி நபர்கள் யாரும் கடைக்கு முன் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்..