குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை பதிவாகாத பட்சத்தில், கருவியில் கார்டை ஸ்கேன் செய்தும், கார்டு எண்ணை பதிவிட்டும் உணவு பொருட்கள் வழங்க வேண்டுமென ரேஷன் ஊழியர்களை கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் கார்டிலுள்ள குடும்ப தலைவர் (அல்லது) உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கைரேகை பதிவுடன் கூடிய விற்பனைமுனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையில் தொலைதொடர்பு சிக்னல் சர்வர் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கைரேகை பதிவு செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொருட்கள் பெற முடியாமல் கார்டுதாரர்கள் பாதிக்கின்றனர். அந்த நேரத்தில் ரேஷன் கார்டின் துரித குறியீட்டை கருவியில் ஸ்கேன் செய்தும், ரேஷன் கார்டு எண்ணை கருவியில் பதிவிட்டும், பொருட்கள் வழங்க வேண்டுமென கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.