தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை மலிவு விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்போது தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் விதம் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக மாறி வருகிறது. அதாவது பல மாவட்டங்களில் இன்னும் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இந்த கடைகள் இருக்கும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதில்லை. மறுபக்கத்தில் பல இடங்களில் இணைய வசதிகள் சரியாக இல்லாத நிலையில்தான் ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. மேலும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் பல நேரங்களில் வெயிலில் காத்து கிடக்க வேண்டியது இருக்கிறது.
இது போன்ற சூழலில் புதிய தோற்றத்துடன் தற்போதுள்ள ரேஷன் கடைகளை நவீனப்படுத்தும் முயற்சி அரசு ஈடுபட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து இந்த கடைகளில் இணையத்தள வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்படுகிறது. இப்போது தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ரேஷன் கடைகள் ஒரே மாதிரியான வடிவில் இருக்கும் படி அதற்கான மாதிரி அரசு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்த மாதிரி கட்டிடத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியது, தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் தேவைப்படுகிறது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான வடிவில் புதுப்பொலிவுடன் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.