விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஈடு செய்ய விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்பட்டது. இதனால் ரேஷன் கடை தினமும் திறப்பதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஊரடங்கு ஆரம்பித்த முதலே தற்போது வரை அவர்களுக்கு, விடுப்பு என்பது வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த 2 மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலைபார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஈடுசெய்யும் வகையில் விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜூலை 17, 24, மற்றும் ஆகஸ்ட் 14ம் தேதி ஆகிய நாட்களில் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.