சத்துணவு திட்டத்தின் நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வழிவகுக்கிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுப்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1 கோடி முட்டைகள் பள்ளிகளில் தேக்கமடைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தில் மதிய உணவும், தினமும் முட்டையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 1 -8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஜனவரி 1 முதல் பள்ளிக்கு வரவில்லை. இதனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் மட்டும் பள்ளிகளில் சத்துணவு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 3 நாட்களாக 1 கோடிக்கும் அதிகமான முட்டைகள் பள்ளிகளிலேயே தேக்கமடைந்துள்ளன.
இந்த முட்டைகளை மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குவது குறித்தோ அல்லது மாற்று ஏற்பாடுகள் குறித்தோ அரசு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதனால் 5 கோடி ரூபாய் மதிப்பிலான முட்டைகள் அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சத்துணவு மற்றும் பள்ளிகல்வி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.