தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு, அரையாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதன்பின் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் கொரோனா 3-ம் அலை பரவ தொடங்கியதால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தொற்றை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியது.
அதன் பலனாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் 1-12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. தற்போது 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில் விரைவில் பாடங்களை விரைந்து நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் முழுமையாக குறையாத நிலையில் 1-8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது நடப்பு கல்வி ஆண்டு முடிய இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால் 1 -8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது சந்தேகமே. அதனால் நடப்பு கல்வியாண்டு முழுவதும் 1-8 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த வேண்டும் எனவும், அடுத்த கல்வியாண்டில் பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். இவ்வாறு பெற்றோர்களை தொடர்ந்து பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 1- 8 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்..