தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. பின் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் மே மாதம் நடைபெறும் என்றும் அதற்கான அட்டவணைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்பின் 10, 12ம் வகுப்புகளுக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில் தற்போது 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வு இன்னும் 2 நாட்களில் முடிவடைகிறது. இந்த நிலையில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் மே மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெறுமா என்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனிடையே 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கிடையாது என்ற தகவல்கள் வெளியாகியது. இதற்கு பள்ளிக்கல்விதுறை பதில் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்ததுடன், கண்டிப்பாக 1-9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.