கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்துவிட்டது என்றே கூறலாம். அத்துடன் கொரோனா முதல் மற்றும் 2ம் அலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இந்த அடிப்படையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்குள்ள சூழலில் பாடம்கற்பது தான் மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. ஆனால் இதனை கடந்த 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்த நிலையில் சென்ற பிப்ரவரி மாதம் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.
தற்போது 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அடுத்தாக வரவுள்ள பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதன்படி 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மே மாதம் முதல் நடைபெற இருக்கிறது. இதில் மே 6 முதல் 30 ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில் செய்முறைத் தோ்வுகள் இந்த வாரம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தோ்வை 304 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 10,954 மாணவா்கள், 9,708 மாணவிகள் என மொத்தம் 20,662 போ் 89 மையங்களில் தோ்வு எழுத இருக்கின்றன. இவற்றில் 2 மையங்கள் தனித்தோ்வா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் முன்னரே கட்டுக்காப்பாளா்கள், வழித்தட அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், பறக்கும்படை அலுவலர்கள் போன்ற பணியிடங்கள் 290 என நிரப்பபட்டு இருக்கிறது. மேலும் நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மையங்களுக்கு 720 அறைக் கண்காணிப்பாளா்கள், அந்தந்த மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நிலையிலான தலைமை ஆசிரியா்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். இதேபோன்று திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 46 மையங்களுக்கு சுமாா் 900 அறைக் கண்காணிப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா் என பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவித்துள்ளனர்.