தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது திருக்கோவில்களின் பாதுகாப்புக்காக 10000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நாற்பத்தி ஏழு திருக்கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோவில் வாரியாக எத்தனை பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்பு தேவை என்று கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க அரசு தற்போது முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுப்பு பணிகள் திருக்கோவில் அதிகாரிகள் மூலம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.இந்த பணிகள் முடிவடைந்த உடன் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.இதனால் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.