தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பினர். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் 1 -12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது வழக்கம்போல் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. அதன்பின் கடந்த மாதம் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ம் தேதியும், 10ஆம் வகுப்புகளுக்கு மே 6 முதல் 30ம் தேதி வரை பொதுதேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொதுத்தேர்வுக்கான பாடங்களை விரைந்து நடத்த கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த குறுகிய காலத்தில் மாணவர்கள் தேர்வுக்கு முறையாக தயாராக வேண்டும் என்பதால் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல உடற்கல்வி வகுப்புகள் நடைபெறும் எனவும் அடுத்த கல்வியாண்டு முதல் 10,11,12ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.