சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் போன்றோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் மணிஷ், சிம்ரன் ஜீத் சிங் காஹலோன் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “கொரோனா சிகிச்சையாளர்களுக்கு தமிழகம் முழுவதிலும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 902 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரையிலும் 8,912 படுக்கைகள் நிரம்பியுள்ளன.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 950 படுக்கைகள் இருக்கின்றன. மேலும் அரசு ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் 350 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருப்போர், மருத்துவ ஆலோசனை பெற்று தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இதனை கண்காணிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 2,000 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.
சென்னையில் வீட்டுத் தனிமையில் இருப்போருக்கு தேவையான வசதிகளை செய்வதற்காக, ஒவ்வொரு வார்டுக்கும் தலா 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்பே சென்னை மாநகராட்சி சார்பாக 1,000 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 535 பணியாளர்களை சென்னை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2,050 படுக்கைகள் இருக்கின்றன. இதில் 203 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. இதுமட்டுமின்றி 100 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
கொரோனாவால் ஏற்படும் இழப்புகளை தடுக்கும் விதமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே ஆகும். தமிழகத்தில் 75% சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. பொதுமக்களும் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். வரும் 22ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 19வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும்” என்று அமைச்சர் கூறினார்.