திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காக 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை வழங்கும் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிய குளங்களை வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை, தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது மற்றும் சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து கிராம மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முருங்கை மரங்கள், பனை மரங்கள் நடும் வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் பல மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மற்றும் பல பொருட்கள் விற்பனை செய்ய பயன்படும் பனை மரங்களை நட 2021 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி மத்திய மாநில அரசுகளுக்கு அளித்த கோரிக்கை மனு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எந்த மரத்தை நட வேண்டும் என நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும், இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்று தெரிவித்தார். இது போன்ற கோரிக்கைகளில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பதால் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. மேலும் வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.