தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரம் பள்ளிகளில் தர நிர்ணய கல்வி மையங்களை அமைக்க இந்திய தரம் நிர்ணய அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமிக்க பொருட்கள், சேவைகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள், இளையதலை முறையினரிடம் அதிகரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 1000 பள்ளிகளில் பிஐஎஸ் கல்வி மையங்களை ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இந்த மையம் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நுகர்வோர் விழிப்புணர்வு மையங்களுடன் இணைந்து செயல்படலாம்.
பொருட்களின் தரம், தரகட்டுப்பாடு, அதனை உறுதி செய்வதற்கான செயல்பாடுகள், விதிமுறைகள் ஆகியவை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் ஒன்பது, பத்து வகுப்பு மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். ஒரு குழுவில் 15 மாணவர்கள் இடம் பெறலாம். அதற்கு முதுநிலை ஆசிரியர் ஒருவர் பொறுப்பாளராக இருப்பது அவசியம். கல்வி மையங்களில் மேற்கொள்ளப்படும் பயிற்சி நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் நிதி உதவியாக ஆயிரம் ரூபாய் பிஐஎஸ் சார்பாக வழங்கப்படும். இந்த உதவி தொகை வருடத்திற்கு மூன்று முறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது