தமிழகத்தில் கொரோனாவின் முதல் மற்றும் 2-ம் அலைகளின்போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. அதாவது முதலில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. இதனையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகளை பொறுத்தவரையிலும் மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. 1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கல்வி, எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா பரவலின் அதிவேகத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, 10 முதல் 12 வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுவதாகவும், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துவது தொடரப்பாக பள்ளிகள் முடிவு எடுக்கலாம் என்று கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, கொரோனா 3-வது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தலாம் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்குப் பின் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ கல்லூரிகளை தவிர மற்ற கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரையில் வெளியாகலாம் என்று தெரிகிறது.