தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் காரணமாக தினசரி பாதிப்பு அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய நடவடிக்கைகள் அமலில் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காரணமாக மாணவர்களின் நேரடி கற்றல் திறனானது பாதித்து இருப்பதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அந்த அடிப்படையில் தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதுபவர்களான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்று வகுப்புகள் நடத்தப்படவில்லை. இந்த வகையில் அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலம் கற்றல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தி இருந்தார்.
அதாவது, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்தி பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். அதன்பின் வாட்ஸ்அப் மூலமாக வாரந்தோறும் பாட வாரியாக குறுந்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்த குறுந்தேர்வில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் எடுத்து இருந்தால், குறைவான மதிப்பெண் எடுத்த பாடங்களை கண்டறிந்து ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.