தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 1858 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 975 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமாகவும் 74 ஆயிரத்து 853 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக காய்ச்சல்,வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகளின் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
இதையடுத்து நடமாடும் மருத்துவ முகாம்களை கூடுதலாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் வாகனங்கள் மூலம் நடமாடும் மருத்துவ முகாம்களை அமைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.அயப்பாக்கம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் 1150 நடமாடும் மருத்துவ வாகன சேவையை நேற்று அமைச்சர் தொடங்கி வைத்தார்.இந்த சேவை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும் தேவைப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி அனுப்பி வைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.