தமிழகத்தில் கொரோனா பரவல் சென்ற டிசம்பர் மாதம் இறுதியிலிருந்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. இதன் பயனாக சென்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1- 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கல்லூரிகளிலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன்பின் சமீபத்தில் பள்ளிமாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது.
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து, அதற்கான காலஅட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இந்த அட்டவணை அடிப்படையில் 12ஆம் வகுப்பு தேர்வு மே 5-28 வரை, 11ம் வகுப்பு தேர்வு மே 9-31 வரை, 10ம் வகுப்பு தேர்வு மே 6-30 வரை நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியு உள்ளார்.
அதில் மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட பல உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசு பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்து பல நுழைவு தேர்வுகளில் பங்கேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பிரபல கல்லுாரிகளில் உயர்கல்வியில் சேர, தேவையான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி தேர்வுக்கு தயாராவதற்கான வினாடிவினா போட்டிகளைநடத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி இன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழியில் வினாடிவினா போட்டி நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி பள்ளிகளில் பாடங்கள் குறித்த ஆசிரியர்கள் இந்த வினாடி வினாவை நடத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.